Saturday, April 18, 2020

மதுரை சித்திரை திருவிழா ரத்து: இணையத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பு!

மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், திருக்கல்யாண நிகழ்வு இணையத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்


மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.

மதுரை என்றாலே நமது நினைவுக்கு வரும் பல விஷயங்களில் முதன்மையானது
மீனாட்சி அம்மன் கோயில். மதுரைக்காரர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் ஆடல், பாடலுடன் களைகட்டும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தேரோட்டம் போன்றவை உலக புகழ் பெற்றவை.

இதனிடையே, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு உத்தரவை வருகிற மே மாதம் 3ஆம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழக கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் முக்கிய நிகழ்வான மதுரை சித்திரை திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது.


இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாண உற்சவம், திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

madurai-chithirai-thiruvizha-festival-2020-canceled-official0-notice-hariharang-madurai-blogger-digitalhari

எனினும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சிக்கு, சுந்தேரஸ்வரர் திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண விழாவை சாஸ்திர சம்பிரதாயபடி எளிமையாக நடத்த அறநிலையத்துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது.முதன்முறையாக இப்பெரும் விழாக்கள் கொரோனா தொற்றால் ரத்தானது பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


கோவில் நிர்வாகம் அறிவிப்பு 


இது குறித்து கோவில் நிர்வாகம் கூறி இருப்பதாவது: மதுரையில் வரும் 25-ம் தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. மே மாதம் 4ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஊரடங்கு உத்தரவை அடுத்து கோவில் சம்பிரதாயப்படி 4 சிவாச்சாரியார்கள் மட்டுமே உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி திருக்கல்யாண வைபவத்தை நடத்துவர் . திருமண நிகழ்ச்சி www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் ஒளிபரப்பப்படுகிறது. திருமணமான பெண்கள் மே 4ம் தேதி காலை 9.05 மணியில் இருந்து 9.29 மணிக்கும் புதிய மங்கல நாணை வீ்ட்டில் இருந்த படியே மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment